No results found

    கர்ப்பம் அடைவதற்கு திட்டமிடும் போது மறக்கக்கூடாதவை...


    திருமண வாழ்க்கையின் மிக முக்கிய அங்கமாக இருப்பது மகப்பேறு. எந்த ஒரு செயலாயினும் அதனைச் செய்வதற்கு முன்பு திட்டமிட வேண்டும் என்பது கர்ப்பம் தரிப்பதற்கும் பொருந்தும். குழந்தை பெற்றுக் கொள்வது என முடிவெடுத்த பிறகு அது சார்ந்து திட்டமிட்டு கர்ப்பம் தரிப்பது ஆரோக்கியமானது என்கின்றனர் மருத்துவர்கள்.

    குழந்தை பெற்றுக்கொள்வதென முடிவெடுத்து விட்டால், மூன்று மாதங்களுக்கு முன்பே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். ஏதேனும் உடற்பிரச்சனைக்காக மருந்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால், கர்ப்பம் தரிக்கும்போது அந்த மருந்தானது குழந்தையை பாதிக்குமா என்று பார்த்து, அப்படி பாதிக்குமெனில் அதற்கு மாற்று மருந்து பரிந்துரைக்கப்படும். குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு ஃபோலிக் ஆசிட் மிகவும் முக்கியமானது. உணவு வழியே கிடைப்பது மட்டும் போதாது என்பதால் ஃபோலிக் ஆசிட் மாத்திரைகள் வழங்கப்படும்.

    ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு பரிசோதிக்கப்படும். ஒருவேளை கர்ப்பச் சர்க்கரை (pregnancy diabetic) ஏற்படும் வாய்ப்பு இருப்பின், அது ஏற்படாதபடி உடற்பயிற்சி மற்றும் உணவுப் பழக்கம் ஆகியவை பரிந்துரைக்கப்படும். முதல் குழந்தைக்கு மட்டுமல்ல, அடுத்தடுத்த குழந்தையாக இருந்தாலும் இந்தத் திட்டமிடல் அவசியம். ஒரு குழந்தை பிறந்த பிறகு அடுத்த குழந்தைக்குத் திட்டமிடுவதென்றால், குறைந்தபட்சம் 18 மாதங்கள் இடைவெளி தேவை. அப்போதுதான் அடுத்த குழந்தைக்கு அவர்களது உடல் தயாராகும். இதுதவிர, முந்தைய குழந்தைக்கான பாலூட்டுதல், அதனைப் பராமரிப்பதற்கான காலமும் கிடைக்கும்.

    இதுவே முந்தைய பிரசவம் சிசேரியனாக இருந்தால் இன்னும் அதிக காலம் தேவைப்படலாம். பொதுவாக குழந்தை பிறகு அடுத்த ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் உற்பத்தி நடப்பதால் கருமுட்டை உற்பத்தி இருக்காது. மேலும், முறையற்ற மாதவிடாய் ஏற்படும் என்பதால் கருத்தரிக்கும் வாய்ப்புகள் குறைவு. விதிவிலக்குகளும் உண்டும். மேலும், அந்தக் காலம் முடிந்தவுடனேயே அடுத்த குழந்தைக்குத் திட்டமிடக்கூடாது. பெண்ணின் உடல்நிலையை பரிசோதித்து ஆரோக்கியமான குழந்தையை ஈன்றெடுக்கும் அளவுக்கு அவர்களது உடலைத் தயார் செய்த பின்புதான் கர்ப்பம் தரிக்க வேண்டும். ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் இடையே மூன்று ஆண்டுகள் இடைவெளி இருப்பது தாய்க்கு மட்டுமல்ல அக்குழந்தைக்கும் நல்லது. சரியான காலத்தில் இரண்டாவது குழந்தையைத் திட்டமிடலாம். உடல் நலம் மற்றும் வயது ஆகிய இரண்டையும் கணக்கில் கொண்டுதான் கருவுறுதலைத் திட்டமிட வேண்டும்.

    Previous Next

    نموذج الاتصال